தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் செயல்படுகிறது. கூட்டுறவுத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் மேற்பார்வையில் செயல்பட்டு வருகின்றது. அரசு முதன்மைச் செயலாளருக்கு உதவியாக கூடுதல் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், சார்புச் செயலாளர்கள், பிரிவு அலுவலர்கள், உதவிப் பிரிவு அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் தலைமைச் செயலகத்தில் பணிபுரிகின்றனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், இந்திய ஆட்சிப் பணி நிலையிலுள்ள கூட்டுறவுத் துறையின் துறைத் தலைவர் ஆவார். தலைமை அலுவலகமான பதிவாளர் அலுவலகத்தில் 1 கூடுதல் பதிவாளர் இந்திய ஆட்சிப் பணி நிலையிலும், 4 கூடுதல் பதிவாளர்கள், 4 இணைப்பதிவாளர்கள் மற்றும் 10 துணைப்பதிவாளர்கள் பணிபுரிகின்றனர். இவைத் தவிர இத்துறையின் புள்ளிவிவரப் பிரிவினை ஒரு உதவி இயக்குநர் (புள்ளியியல்) கவனித்து வருகிறார். இதேபோல் திட்டம், வரவு செலவு மற்றும் கணக்குகள் தொடர்பான விவகாரங்களை, அரசின் துணைச் செயலாளர் நிலையில், ஒரு நிதி ஆலோசகர் மற்றும் முதன்மை கணக்கு அலுவலர் கவனிக்கின்றார். கூட்டுறவு சார் பதிவாளர்கள், பிரிவு கண்காணிப்பாளர்களாக பணிபுரிகின்றனர். இவர்களின் கீழ் பிரிவு உதவியாளர்களாக முதுநிலை ஆய்வாளர் மற்றும் இளநிலை ஆய்வாளர் பணிநிலையில் பணிபுரிகின்றனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில், மாநிலத்தில் மொத்தம் 38 மண்டல அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஓர் இணைப்பதிவாளர் பணியாற்றுகிறார். சென்னை மண்டலத்தில் மட்டும் கூடுதல் பதிவாளர் நிலையில் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. இதர மண்டலங்களில் இணைப்பதிவாளர் பணிநிலையிலும் பணியாற்றுகின்றனர். சென்னை மண்டல கூடுதல் பதிவாளரும் பிற மண்டல இணைப்பதிவாளர்களும் மாவட்டத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள், நுகர்வோர் கூட்டுறவுகள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற தனிவகைச் சங்கங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பாவார்கள்.
கூட்டுறவுத் துறை நிர்வாகத்தின் பொருட்டு, மாநில அளவில் 73 சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்தைப் பொறுத்தவரை கடன் மற்றும் கடன் அல்லாத கூட்டுறவுச் சங்கங்களுக்கானப் பணிகளின் அடிப்படையில் இரண்டு சரகங்கள் உள்ளன. மண்டல இணைப்பதிவாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் சரகத் துணைப்பதிவாளர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் 1983 மற்றும் விதிகளின் படியான பதிவாளரின் அதிகாரங்கள் அரசாணை எண்.108 (2டி), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நாள் 31.08.2005 மற்றும் அரசாணை எண்.109 (2டி), கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, நாள் 31.08.2005-இன் படிகூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களுடைய அதிகாரங்கள் கூடுதல் பதிவாளர், இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர் அளவில் அதிகாரங்கள் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டுமே தலைமை கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படுகின்றன. இதர அனைத்து கூட்டுறவு நிறுவனங்களும் மண்டல இணைப்பதிவாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.
சரக துணைப்பதிவாளர்கள் சரக எல்லைக்குள் உள்ள கூட்டுறவு சங்கங்களின் ஆய்வு மற்றும் மேற்பார்வை பணிகளை கவனிப்பதுடன், விசாரணை, தாவா நிறைவேற்று மனுக்கள், கலைத்தல் போன்ற சட்டப்பூர்வமான பணிகளையும் மேற்கொள்கின்றனர். கூட்டுறவுச் சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் சரகத் துணைப்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் பணிபுரிகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சரக துணைப்பதிவாளர்களைத் தவிர நியாயவிலைக் கடைகளை மேற்பார்வையிட கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் ஆகிய பணியாளர்களுடன் கூடிய ஒரு பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் பணியாற்றுகின்றனர். இவர்களும் மண்டல இணைப்பதிவாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை கண்காணிப்பதற்கென இரண்டு இணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத்திட்டம்) உள்ளனர்.
பொது விநியோகத்திட்ட இணைப்பதிவாளர்களின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் ஏழு துணைப்பதிவாளர்கள் (பொது விநியோகத் திட்டம்) பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
(தலைமை செயலகம்)
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்
(துறைத்தலைவர்)
கூடுதல் பதிவாளர்கள் (24)
இணைப்பதிவாளர்கள் (86)
துணைப்பதிவாளர்கள் (288)
கூட்டுறவு சார்பதிவாளர்கள் (1937)
முதுநிலை ஆய்வாளர்கள் (1318)
இளநிலை ஆய்வாளர்கள் (234)
டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் IAS
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறை
டாக்டர்.என். சுப்பையன் I.A.S
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்